எழுத்தாளர்கள் நட்சத்திரங்களை போல.

சில எழுத்தாளர்கள்
நட்சத்திரங்களாகவேண்டும்
என்று ஆசைப்படுகிறார்கள்.
அனால் அவர்கள்
மிஞ்சி மிஞ்சி போனால்
தெருவிளக்குகள் மட்டுமே.

அவர்களை சுற்றி
தீயுண்ணிகள் என்று தங்களை நினைத்துக்கொண்டிருக்கும்
ஈசல்கள்,
தலைமுட்டி கூட்டம் போடுகின்றன.
அவர்களுக்கு இந்த எழுத்தாளன்,
அந்த விளக்கு,
எல்லாம் ஒன்று தான்.
இன்று இங்கே கூட்டம்,
நாளை அங்கே,
மற்றொரு நாள் வேறெங்கோ.
அதற்கடுத்த நாள் செத்தே போய்விடும் சில ஈசல்கள் –
ஜோதியிலே ஐக்கியம் ஆகி விடுகிறார்களோ?

தெரு விளக்குக்கு
தான் நட்சத்திரம்
என்றே நினைக்க தோன்றுகிறது
ஆனால் அது தெருவிளக்கே.

சில எழுத்தாளர்கள்
நட்சத்திரங்களை போல.

அவர்களுக்கு ஒரு உள்ளொளி உண்டு,
தன்னையே பொசுக்கி வரும் ஒளி அது.
அவர்களுக்கு புவியீர்ப்பு விசை எல்லாம் கூட உண்டு.
அவர்களை சுற்றி
கனத்த கோள்கள் வட்டமிடுகின்றன.
தலை முட்டாமல் தற்குறியுடன்
பேசிக்கொள்கின்றன.
அவையும் ஆயிசு முடியும்போது
நட்சத்திரங்களில் கலந்து விடுகின்றன.

தெரு விளக்கு கேட்கிறது,
“நட்சத்திரமே! உனக்கும் எனக்கும்
அப்படி என்ன வித்தியாசம்?
நானும் ஒரு தெருவுக்கு ஒளியூட்டுகிறேன்.
நீயும் ஒளியூட்டுகிறாய்,
சூரிய மண்டலம் என்ற சற்றே பெரிய தெருவிற்கு.
உனக்கு ஒன்பது கோள்கள் என்றால்
எனக்கு எண்ணிலடங்கா ஈசல்கள்.
நீ எங்கோ அந்தரத்தில்
புராண கனவுலகொன்றில்
உன் வாழ்நாட்களை கழிக்கிறாய்,
நானோ நிலத்தில் காலூன்றி
கடைவீதியில் நானும்
ஒரு கதைமாந்தராகி
மனிதனோடு மனிதனாக
வாழ்கிறேன்.
சொல்,
நீ அப்படி என்ன கண்டு வீட்டாய்,
நட்சத்திரமாக இருந்து?”

சொல்லவா?

சில எழுத்தாளர்கள்
நட்சத்திரங்கள் ஆக விரும்புவது
ஏனென்றால்,
ஏதோ ஒரு யுகத்தில்,
ஏதோ ஒரு வெளியில்,
அவர்களிடம் தோன்றும் ஒளி,
காலம் கடந்து
தூரம் பறந்து
எங்கோ
யாரோ ஒருவனை
எப்போதோ கண்டடைகிறதே,
அதற்காகத்தான்.

எழுத்தாளன் அதை எதிர்பார்க்கிறான்
ஏக்கம் கொள்கிறான்
ஆசைப்படுகிறான்.
அவன் தொலைநோக்கிகளை
எதிர்நோக்கிக்கொண்டே இருக்கிறான்.

பல எழுத்தாளர்கள் மின்மினிப் பூச்சிகள்
சிலர் அழகும் அடக்கமுமே உருவான அகல்கள்,
மேலும் சிலர்
பளீர்! தெரு விளக்குகள்.
ஆனால்
ஒரு தலைமுறைக்கு
ஒருவரோ இருவரோ
துருவ நட்சத்திரங்கள்.

ஆக தெருவிளக்கே,
தெருவிளக்குகள் முக்கியம் தான்.
தெருக்களில் பாதுகாப்பாக நடமாட வேண்டாமா?
உன் பணியை நன்கு செய், வாழ்க நீ எம்மான்!
ஆனால் நீ நட்சத்திரம் அல்ல.

தெருக்களை விட்டு வெளியே வந்தவனுக்கு
தெருக்கள் இல்லா வெளியில் திரிபவனுக்கு
என்றோ பூத்த
ஒற்றை நட்சத்திரமே
ஒளி.

Posted in சொந்த சரக்கு, Poetry, Tamil | Leave a comment

விஸ்வரூபம்.

நீல் வானும் நீள் கடலும் நோக்க அவன் குறளனே. ஆனால் அவன் ஆழ்நிலையில், பேருருவான நீலப்பாதத்தடம் ஒன்று உண்டு. நிலையுலகின்  நினைவெல்லாம் நிராகரித்து அதை நில்லாமல் நோக்குபவன்,  தன்வால் கவ்வும் நீள்நெடுமன் வென்று,  கடல்வண்ணமும் கொண்டல்வண்ணமும் தன்னிறமாக்கி, ஆழியில் ஒரு பாதம் வைத்தும் ஆகாசத்தில் மறு பாதம் வைத்தும் ஓங்கி நிலமளந்து நின்று, மனிதனென விஸ்வரூபம் எடுக்கிறான். அவனே நீலன், அவனே நெடுமாலன்.

Man.jpg

Posted in சொந்த சரக்கு, Tamil | Leave a comment

கவிஞனும் கோப்பையும்

கவிஞர்களே, உங்களுக்கு கவிதையின் மயக்கம் போதாதா?
கோப்பையின் மயக்கம் எதர்க்கு?
நீங்கள் அக்கோப்பை திரவத்தில்
கவிதையெனும் மீன் பிடிக்க
உயிரைத் தூண்டிலாகப் போடுவதென்பது
எப்படி நியாயமாகும்?
நீங்கள் குடலழுகி மடிந்தால் உங்களுக்கு
இறங்கல்பா பாடவாவது கவிஞரிங்கு வேண்டாமா?

Posted in சொந்த சரக்கு, Poetry, Tamil | Leave a comment

Pavalamalli

Mother leaves for the storytelling,
father retreats to the room upstairs,
and baby brother drifts off
to the first line of his soft lullaby.
Grandpa needs some fanning,
but when he sleeps,
the whole house sleeps with him.

Late in the night,
when all other flowers
are done with their flowering,
the pavalamalli
gently unfurls.

when the story finishes
and mother returns
when the full moon
casts long shadows
in the solitude
of that hour
do you ever
think
of me?

(~Gnanakkoothan)

(ஞானக்கூத்தன் இயற்றிய ‘பவழமல்லி’ கவிதையின் மொழியாக்கம்.)

Posted in Poetry, Tamil, Translation | Tagged | Leave a comment

My friend Mosikeeranar

Mosikeera!
You must find it in your heart
to forgive me:
I am cheeky
only because I am delighted.

You have, to your name
Sangam poems that brought you fame,
yet not one have I read – for shame.

but today,
thinking of you I feel
an abiding love,

because you may be the first man
in all of recorded history
to take a nap
in a government office.

(~Gnanakkoothan. The poem refers to a Sangam poet called Mosikeeranaar who wrote a poem in the anthology ‘Puranaanooru’ about taking a nap on the king’s bed. He wakes up to find the king fanning him solicitously. Our government officers may not be as fortunate. I love the sheer cheek and delight in this poem.)

(ஞானக்கூத்தன் எழுதிய ‘தோழர் மோசிகீரனார்’ கவிதையின் மொழியாக்கம். மோசிகீரனார்  சங்கக்கவிஞர். அவர் இயற்றிய புறநானூறு கவிதை ஒன்றில் (புறம் 50) அரசனின் மாளிகைக்கு வந்து, அயர்ந்து, அங்கேயே தூங்கி விடுவார். அவர் கவிஞர் என்பதால் மன்னனே அவருக்கு விசிறி விடுவார். நமது அரசாங்க ஊழியர்களுக்கு அந்த குடுப்பனையெல்லாம் கிடையாது.)

 

 

 

Posted in Literature, Poetry, Tamil, Translation | Tagged | Leave a comment

யட்சியின் கண்ணொளி

My_Yakshi.PNG

(நான் சொல்வது)

என் ஆழ்மனதில் வாழும் யட்சியே, யாரடீ நீ?
உனக்கு பெயர் உண்டா?
ஒரு சிறு பறவை போல் என்னுள்
உன் சிறகுகள் படபடக்க
நான் கேட்டதுண்டு.
நிலவோடு நீயும் என்னுள்
வளர்வதையும் தேய்வதையும்
நான் கண்டுள்ளேன்.
நான் என்னை மறந்துவிடும் தருணங்களில்
என்னை புறம் தள்ளி, நீ
என் ‘நான்’ என்ற சிம்மாசனந்த்தில் வந்தமர்கிறாய்.
ராஜமாதங்கியென வீணையேந்தி
விந்தையென பல ராகங்கள் இசைக்கிறாய்.
கூந்தல் விரித்து மல்லிகை சூடி நிலவனை நோக்கி புன்னகைக்கிறாய்.
அவன் கட்டும் வெள்ளியம்பலத்தில் கூத்தாடுகிறாய்.
சிறு குமரியென உன்னை கற்பனை செய்துகொண்டு
மண்ணில் சப்பளம்கால் வைத்தமர்ந்து
சிற்றில் பல கட்டுகிறாய், கலைக்கிறாய்.
மிகவும் பொறுமையுடன்
என்னுள் உறையும் நிறங்களை கறந்து
களமெழுதுகிறாயே,
அச்சித்திர முகம் யாருடையது?

செயலிழந்து புறம் தள்ளப்பட்ட என் ‘நான்’,
உன்னை ஆராதிக்கிறது.
நீயாக வேண்டும் என
அது எண்ணுகிறது.
அதே நேரத்தில்
ஆடியில் பார்க்கையிலே
அதன் கண்களில் தென்படும் யட்சியின் கண்ணொளி
அதை மிரளச்செய்கிறது.
உன்கையில் தன் மணிமுடியை ஒப்படைத்து
ஏதோ ஒரு காட்டுக்கு சந்நியாசம் வாங்கிச்செல்ல
என் ‘நான்’ ஆசைப்படுகிறது.
பாவம் அது.

(வரலாறு – யட்சிகளை பற்றி)

யட்சி
கட்டற்ற ஆசைகள் பலவும்
கறாரான அப்யாஸங்கள் சிலவும்
கொண்டவள்.

தன்னைத்தானே அலங்கரித்துக்கொண்டு
தன்னுள் தன்னையே ஒரு உலகமாக்கி
தன்னில் திளைப்பவளே யட்சி.

ஆயிரமாயிரம் ஆடிகள் தொங்கும் பெரும் அறை அது
அங்கு அவளது ஆயிரமாயிர முகங்களைத் தவிர
வேறு யாருக்கும் இடமில்லை.

ஒரு காலத்தில்
யட்சிப்புகுந்த பெண்கள் என்றால்
காதில் மெழுகு காய்ச்சி ஊற்றி
“நான் யட்சி! நான் யட்சி!”
என்று கதறும் வரை காத்திருந்து
பின்பு தீயிலிட்டனர்.
ஒரு கட்டத்தில்
அவர்களை ஆண்டாள்கள் ஆக்கி அழகு பார்த்தனர்.
களத்தில் அமர்த்தி
யோனி பூசைகள் செய்தனர்.
மரத்தில் மந்திரித்து
ஆணி அடித்து அறைந்தனர்
(இயேசு கிறிஸ்துவைப்போல,
அவர் ஆண் யட்சி, அவ்வளவுதான்.)
பின் பிராய்ட் வந்து,
“அவர்கள் கருப்பைகள்
உடலெங்கும் ஊர்த்திரியும்!”
என்று விளக்கொளியில் கண்ணுருட்டி
பாட்டிகள்போல பேய்க்கதைகள் சொன்னார்.
வேறுவழி இல்லையென்றால்
கடைசி வழியென
கல்யாணம் செய்து வைத்தனர்.
யட்சிகளுக்கு
கல்யாணத்தை போல
பிறிதொரு கொடுமை இல்லை.

யட்சிகளை அடக்கினால் முதலில்
மிருதுவான மிருகங்களைப் போல
மிரள்கின்றனர்.
ஆனால்
அதுவே மீறினால்
அனல்குட்டியென
அவள் கண்ணொளி
காட்டுத்தீயாகலாம்.
அப்போது
அது அணையும்வரை
அவள் ஓயமாட்டாள்.

இது தெரிந்த,
யட்சிகளை கண்டால்
பயப்படுகின்ற,
பொறாமை படுகின்ற,
யட்சியற்றவர்களால்
சதியான யட்சிகள்
பல.

(இன்று – என் செல்ல யட்சி சொல்வது)

நல்லவேளை,
கூந்தல் கத்திரித்து ஜீன்ஸ் அணிந்து உலகம் சுற்றி
ஆண்யட்சி ஒன்றை கண்டடைந்த
பெண் யட்சியாய் பிறந்தேன்.
என் பறவைகள் எல்லாம்
சிட்டுக்குருவிகள்.
என் கண்ணொளி மங்காமல்
கலங்கரை விளக்கமென
உற்சாகமாக எரிகின்றது,
எல்லாம் சுபம்.

(9-8-2016)

Posted in சொந்த சரக்கு, Poetry, Tamil | Leave a comment

படைப்பூக்கம்

எந்த குழந்தையை பெற்றெடுத்தேனோ தெரியவில்லை.
முலைகள் கனத்து முட்டி மோதி
வெளிவர வழி தேடி
பீய்ச்சி வரும் தாய்ப்பால் போலச்
சொரிகிறது படைப்பூக்கம்.

(8-8-2016)

Posted in சொந்த சரக்கு, Poetry, Tamil | Leave a comment